சென்னை: திருவான்மியூரில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய கல்லூரி கலாசேத்ரா பவுண்டேஷன். இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் முன்னாள் பெண் இயக்குனர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளம் மூலமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கலாசேத்ரா கல்லூரியின் தற்போதைய இயக்குனர் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தொடர்பாக மாணவிகள் பலரும் ரகசியமாக பேசி வந்துள்ளனர்.
இதை பற்றி தகவலறிந்த கலாசேத்ரா நிர்வாகம், பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் கமிட்டி மூலம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் மாணவிகள் தரப்பிலிருந்து பொய்யான புகார் வந்திருப்பதாக தெரிவித்தது. இருப்பினும் இந்த விவகாரம் கசிந்ததால் தானாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடவடிக்கை எடுத்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதோடு விசாரணை திருப்திகரமாக இல்லையென்றால் தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை கையில் எடுக்கும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் கலாசேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் வேளையில், பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்ட மாணவி, திருவான்மியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.