சென்னை: அசோக் நகரில் இயங்கி வரும் மத்திய அரசுப் பள்ளியில் சமீபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்தார். மாணவனை அதே வகுப்பில் படிக்கும் 12 மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து கேலி செய்து வந்ததாகக் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவன், தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை எடுத்துரைத்துள்ளான். இதைக் கேட்ட மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார்.
இதனையறிந்த மற்ற மாணவர்கள், கோபத்திற்கு உள்ளாகி அந்த மாணவனைப் பல வழிகளில் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் வைத்துத் தாக்கியுள்ளனர். மாணவர்கள் தாக்கியுள்ளதைத் தனது தந்தையிடம் தெரிவிக்காமல், வயிற்று வலி என்று கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து மாணவனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் தந்தை அனுமதித்துள்ளார். சிகிச்சையின் போது தனது தந்தையிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளான். உடனே அவனது தந்தை இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து மாணவனின் தந்தை ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில்,"நான் சென்னைக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. என்னுடைய அப்பா மத்திய அரசின் ஊழியர். அதன் காரணமாக என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசுப் பள்ளியில் இடம் கிடைத்தது. புதுச்சேரியில் இருந்து நான்கு மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்தோம். அப்போது சென்னையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் என்னுடைய குழந்தைகள் இரண்டு பேரையும் சேர்த்தேன். மகன் 10ஆம் வகுப்பும், மகள் 7ஆம் வகுப்பும் படித்து வந்தனர். நான் சினிமா சம்பந்தமான கூத்துப் பட்டறையில் சிலம்பம் பயிற்சியாளராக இருக்கிறேன்.
பள்ளியில் சேர்ந்த நான்கு நாட்களில் இருந்து என்னுடைய மகனுக்கு, அவனுடன் படிக்கும் சக மாணவர்களால் தொந்தரவு இருந்துள்ளது. இதை என்னிடம் அவன் சொன்னான். ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் என நானும் பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் சக மாணவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், பள்ளிக்கு நானே சென்று ஆசிரியர்களிடம் புகார் அளித்தேன். அவர்கள் இனிமேல் இப்படிச் செய்யக்கூடாது என அந்த மாணவர்களைக் கண்டித்து அனுப்பி விட்டனர்.
இதற்கு அடுத்து ஒரு மாதம் கழித்து அதே மாணவர்கள், என்னுடைய மகனை ஆபாசமாகப் பேசியும், தாக்கியும், பாலியல் ரீதியிலான கதைகளைக் கூறி படிக்கவிடாமல் செய்துள்ளனர். ஆபாசமான படங்களை பார், எங்களிடம் ஆபாசமாகப் பேசு என என்னுடைய மகனை வற்புறுத்தியுள்ளனர். பள்ளி இடைவேளை நேரத்தில் கழிப்பறையில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இவர்களின் செயல்பாடுகளுக்கு அடங்க மறுத்ததால் தாக்கியுள்ளனர்.