சென்னை: அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பிரதான சாலையில் இன்று (நவ.13) அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நின்றவர்கள், தூய்மைப் பணியாளர் மற்றும் சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் என 6 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் இருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரில் மூன்று நபர்கள் பயணித்ததாகவும், அதில் இருவர் தப்பிய நிலையில், காரில் இருந்த ஒருவரைப் பிடித்து மக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.