சென்னை:கோடைக்காலத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உடலின் சூட்டை குறைப்பதற்காக பீர் குடிப்பதாக மதுப்பிரியர்கள் கூறிவரும் நிலையில், ஆல்கஹால் அருந்தினால் ஹீட் ஸ்ட்ரோக்(heat stroke) வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மது அருந்தும் போது உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும் எனவும், மது போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறுவதால், ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு அடைப்புகள் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்தும், வெயில் காலத்தில் வரும் நோய்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காலையில் 11 மணி முதல் மதியம் 3 மணி வரையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது வெளியில் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மதுபானம், டீ, காபி போன்றவற்றையும் அருந்தக்கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர். மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு என கூறினாலும் அதன் மீது பிரியம் கொண்டவர்கள் தொடர்ந்து அருந்தி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஏற்படும் சூட்டுடன் கூடுதலாக வெப்பத்தை அதிகரிக்கும் மது வகைகளை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
இது குறித்து பொது அறுவை சிகிச்சை மருத்துவரும், உடல் உறுப்பு தான ஆணையத்தின் முன்னாள் அலுவலருமான அமலோற்பவநாதன்(Dr.J.Amalorpavanathan) கூறும்போது, "மகாராஷ்டிரா மாநிலத்தில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் சன் ஸ்டோக் காரணமாக இறந்து விட்டனர். இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என கூறுகின்றனர். கடும் வெயில் நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரையில் வெளியில் செல்லாதீர்கள். முடிந்தவரையில் வீடுகளிலோ, அலுவலங்களிலோ இருங்கள். எளிமையான பருத்தி ஆடையை அணிவதுடன், நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கடுமையான உடற்பயிற்சிகளை இந்த நேரங்களில் செய்வதை தவிர்த்து, காலை அல்லது மாலை நேரங்களில் செய்யுங்கள். குளுமையான இடங்களில் பணிபுரிய பாருங்கள். வேலைக்காரணமாக வெளியில் செல்ல வேண்டியதிருந்தால், நன்றாக சாப்பிட்டு விட்டு, கையில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். பெண்கள் வெளியில் செல்லும் போது கழிப்பறை இருக்காது என்பதற்காக தண்ணீர் குடிக்காமல் இருந்து விடாதீர்கள். அதனைவிட உயிர் மிகவும் முக்கியமானது.
இரு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து கார், பஸ்சில் செல்லுங்கள். மது உடல் நலத்திற்கு கேடு விளைக்கிறது. மதுவினால் பலவிதமான நோய்கள் வருகிறது. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் புற்று நோய் வருவதற்கான 4 முக்கியமான காரணிகளில் மதுவும் ஒன்றாக கூறியுள்ளது. மதுவினால் கல்லீரல் பாதிப்பு என்பதையும் தாண்டி புற்றுநோய் வருவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே மதுவை அருந்தகூடாது.