சென்னை:கடந்த ஜனவரி 17ஆம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம், வழக்குரைஞர் விக்டோரியா கெளரி உட்பட 8 பேரைச் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், விக்டோரியா கெளரி சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டதாக அவரது பெயரைப் பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் விசாரணை முதலில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே நேற்றைய முன்தினம் (பிப்.6) அன்று, விக்டோரியா கெளரி உள்பட 5 பேரைக் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதேநேரம் அதற்கு மறுநாளே (பிப்.7) உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்ய வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
எனவே இதனை அவசர வழக்காக விசாரித்த சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் விக்டோரியா கெளரி, நேற்று (பிப்.7) சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார். இருப்பினும், விக்டோரியா கெளரியின் நியமனத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த ஜான் சத்யன்?உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 பேரை கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. அதில் 4 பேரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, எஸ்.செளந்தர் மற்றும் ஜான் சத்யன் ஆகியோரை நிராகரித்தது.
இந்த நிராகரிப்புக்குக் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும், மருத்துவ மாணவி "அனிதா உயிரிழப்பு இந்தியாவிற்கான அவமானம், அரசியல் துரோகம்" எனக் குறிப்பிட்டதாக உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குரைஞர் ஜான் சத்யனின் பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.