சென்னை: இந்திய அரசியலில் தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் வேறுபாடானது. மற்ற மாநில அரசியலில் எல்லாம் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் மட்டும்தான் தலைவர்கள் உருவாவார்கள். அந்தவகையில் தமிழகத்தில் உருவான தலைவர்களான பெரியார், அண்ணா போன்றோர், அடுத்தடுத்து உருவாகும் தலைவர்களுக்கு ரோல் மாடல்.
இந்த ரோல் மாடல்கள் வரிசையில் இன்னொருவர் பெயரை இணைக்கலாம் என்றால் அது கருணாநிதிக்குத் தான் பொருந்தும். பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியில் பகுத்தறிவு பழகி, பேரறிஞர் அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் திராவிடத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் பம்பரமாய் சுழன்று, தமிழகத்தின் தலைவனாய் உயர்ந்தவர் கருணாநிதி.
பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர், பேச்சாளர், எழுத்தாளர், பெரும் புத்தக வாசிப்பாளர், கலை இலக்கிய ஆர்வலர், களச்செயல்பாட்டாளர், அரசியல்வாதி என்கிற பல்வேறு பரிமாணங்களோடு தன் இறுதி மூச்சு வரை தமிழை சுவாசித்த தமிழ் பித்தன் கருணாநிதி.
எழுத்தும் செயல்பாடும்: பராசக்தி படம், இச்சமூகத்தில் எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். அந்த அதிர்வலையைத் தனது பேனா மூலம் எழுப்பியவர் கருணாநிதி. பராசக்தி படத்தில், மனிதனை மனிதனே ரிக்ஷாவில் இழுக்கும் பழக்கம் குறித்து 'நீ சென்னைக்கு மேயராக வந்து இந்த பழக்கத்தை மாற்றிவிடு' என்ற வசனம் மூலம் வெளிப்படுத்தினார்.
எழுதியதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர் போட்ட முக்கியமான கையெழுத்துக்களில் 'கை ரிக்ஷா முறை ஒழிப்பும்' ஒன்று. எழுதிவிட்டாலே சமூகம் திருந்திவிடும் என்று நினைக்கும் படைப்பாளர்கள் மத்தியில் கருணாநிதி தான் எழுதியவற்றைத் தானே நடைமுறைப்படுத்தினார். அதேபோல் வீட்டு வசதி மாற்று வாரியம் அமைத்தது, பேருந்துகளைப் பொதுவுடைமை ஆக்கியது என அவர் போட்ட விதைகள் அத்தனையும் வீரியமானவை. அந்த விதைகள் அனைத்தும் இன்று நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
தவிர்க்க இயலா ஆளுமை: தமிழகத்தில் பல்வேறு தரப்பினராலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகக் கருணாநிதியைக் கொண்டாடப் பல காரணங்கள் உள்ளது. அவற்றுள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, உடல் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி எனவும், பல்வேறு இழிசொற்களால் அழைக்கப்பட்ட 3ஆம் பாலினத்தவர்களைத் திருநங்கை எனவும் அழைக்க வைத்தவர் கருணாநிதி.