சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி (M.Karunanidhi) ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்தவர். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராகப் பணியாற்றினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ஆம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக கருணாநிதி பிறந்தார். கருணாநிதிக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம் ஆவார்.
கருணாநிதி, தமிழ் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி' (Parasakthi - 1952) திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது. இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7ஆம் நாள் தம்முடைய 94ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
கருணாநிதிக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் ஒருமுறை கூட தோற்காத கருணாநிதி: 1957ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டார். மேலவை உறுப்பினரானதால் 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கருணாநிதி அவரது மறைவு வரை போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 'கல்லக்குடி போராட்டம்' (Kallakudi protest) தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு (Hindi imposition) தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.
அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய கருணாநிதி: மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். அருந்ததியர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை (Arunthathiyar reservation) வழங்கினார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக்காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை சென்னையில் உருவாக்கினார். ஒரகடத்தில் உரத்தொழிற்சாலை தொடங்கினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி:1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் லஞ்சத்தை காரணமாக காட்டி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடி நிலை (Indian Emergency - 25) மிசா அறிவிப்பை மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (Indira Gandhi) அமல்படுத்தினார். 1977ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் (DMK) அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும், திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். காங்கிரஸை கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
1977-ல் ஆட்சியை இழந்த திமுக: 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி.ஆர் 'அதிமுக' (AIADMK) என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் (Karunanidhi VS MGR) களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார், கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியை விட 16,438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். இருந்தபோதிலும், அப்போது திமுக ஆட்சியை இழந்தது.
கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி.ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
உடன்பிறப்பே என்று முழங்கிய கருணாநிதி:அண்ணா (C.N.Annadurai) மறைவுக்குப் பிறகு, முதலமைச்சரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் தொடங்கினார், கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் ஆரம்பித்தார். மேலும், கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார். கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி தொடங்கியதிலிருந்து, 2016-ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார். உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000-க்கும் மேல் ஆகும். உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் `சங்கத்தமிழ், தொல்காப்பிய உரை, இனியவை இருபது, கலைஞரின் கவிதை மழை' உட்பட 150-க்கும் மேலான நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார்.
காலை 3 மணிக்கு எழும் கருணாநிதி: 'நேரம் தவறாமை' கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார். முதலமைச்சராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.
இரு முறை திமுகவை மீட்டெடுத்த கருணாநிதி:கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை கருணாநிதி மீட்டெடுத்தார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச டிவி வழங்கிய கருணாநிதி:விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுவரை தஞ்சை பெரிய கோயிலுக்கு உள்ளே செல்லாத கருணாநிதி: வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோயிலின் (Thanjavur Big Temple), 1,000வது ஆண்டு விழாவில் பெரிய கோயிலின் உட்புறம், நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 பேர் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை காண, முதலமைச்சர் கருணாநிதி, பட்டு வேட்டி, சட்டை அணிந்து, குறிப்பிட்ட பிரதான வழியில் வராமல், ராஜராஜசோழன் சிலை வழியாக, சிவகங்கை பூங்கா வழியாக கோயிலுக்குள் நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார். மேலும், கருணாநிதி இறக்கும் தருவாயில் வரை தஞ்சை பெரிய கோயிலுக்கு உள்ளே செல்லவில்லை.
அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி:எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார், சபாநாயகர். ஆனால், கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார், சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளன.
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை.. கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியம்" என்றார். "மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது" - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.
கருணாநிதி கைது:2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன. மேலும், கடும் எதிர்ப்பை ஜெயலலிதா சந்திக்க நேர்ந்தது. பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டது. கருணாநிதி, ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என 11 முதலமைச்சர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார்.
இறந்தும் வென்றார் கருணாநிதி: வயது மூப்பு காரணமாக, 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி சென்னையில் கருணாநிதி காலமானார். அவர் மெரினா கடற்கரையில் (karunanidhi memorial Marina Beach) புதைக்கப்பட்டார். ஆனால், அதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. மெரினாவில் அண்ணா சமாதி இருக்கும் இடத்தில் கருணாநிதியை புதைக்க அரசு அனுமதி மறுத்ததையடுத்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து 'இறந்தும் வென்றார் கருணாநிதி' என்று அவர் பலராலும் நினைவுக்கூறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:15 வசதிகளுடன் ஈரடுக்கு ஏசி பஸ் ஸ்டாப்.. தருமபுரி எம்.பியின் அசத்தல் திட்டம்.. நாளைக்கு பயன்பாட்டுக்கு வருது!