சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை (அக்.21) காலை 7 மணிக்கு விண்ணில் செலுத்தி இஸ்ரோ சோதனை செய்ய உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து மணிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரியனை ஆய்வு செய்ய செப்.2 ஆம் தேதி ஆதித்யா-எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதன் தொடர்ச்சியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆனது தற்போது விண்ணுக்கும், நிலவுக்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அதி தீவிரம் காட்டி வருகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னர் 3-கட்ட சோதனைகள் நடைபெறும், இந்த 3-கட்ட சோதனையில், நாளை (அக்.21) அன்று முதல் சோதனையானது நடைபெறுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ககன்யான் முதல் சோதனை: இந்த ககன்யான் முதல்கட்ட சோதனையானது, நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) உள்ள முதல் ஏவுதளத்தில், நாளை (அக்.21) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சோதனையில், மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தின் (crew module) செயல்பாடு குறித்தும், பாதுகாப்பாக தரை இறங்குதல் குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், "விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா அனைவரும், தீவிரம் காட்டி வருகின்றனர். முதன் முதலில் அமெரிக்காவின் நாசாவானது விண்ணுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. மேலும், நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து இந்தியா தீவிர ஆய்வில் ஈடுப்பட்டு வருகிறது.
மேலும், 63-ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பட்ட அப்போலோவின் திட்டமானது, மிகப்பெரிய திட்டம். அதற்காக செலவிட்ட தொகையும் அதிகம். தற்போது இந்தியாவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில், நாளை முதற்கட்ட சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும், ககன்யான் திட்டம் அருகில் இருக்கும் விண்வெளிக்கு (Near Space) செல்லும் திட்டம் தான். இந்த திட்டம் வெற்றி பெற்றால். அதைத் தொடர்ந்து நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் போது எளிதாக இருக்கும்" என்றார்.
எப்படி சோதனை நடைபெறும்?மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தை டிவி-டி1 ராக்கெட் மூலம் அதவாது, (TV-D1: Test Vehicle-Demonstration-1) என்ற ராக்கெட் மூலம் நாளை காலை 7- மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துப்படுகிறது.
சுமார் தரையில் இருந்து 60 டிகிரி கோணத்தில், விண்ணில் பாயும். பாய்ந்த பிறகு, 63-ஆவது விநாடியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12.7 கி.மீ உயரத்தில் இருந்து, மாதிரி விண்கலத்தை பிரிப்பார்கள். மீண்டும் மாதிரி விண்கமானது, தொடர்ந்து, 30 விநாடிகள் பயணித்து, 91.2-ஆவது விநாடியில், 16.9 கி.மீ உயரத்தை அடைந்த பின், (crew Escape module)-யில் இருந்து, மனிதர்கள் செல்லகூடிய விண்கலம் மட்டும் தனியாக கடலில் வந்து விழும்.