சென்னை: சென்னையில் தினமும், நாளொன்றுக்கு உற்பத்தியாகும் கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது. இதில், முக்கியமாகப் பார்க்கப்படுவது திடக்கழிவு தான். சென்னையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளின் அளவு 6,143 டன் ஆக இருந்து வருகிறது.
வரும் காலங்களில் அது, 11,973 டன்களாக அதிகரிக்கும் என சென்னை மாநகராட்சி சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. அதேப்போல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில், ‘பயோ மைனிங்’ முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கும் பணிகளையும் மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி மேயர் இத்தாலி நாட்டிற்குச் சென்று, அந்த நாட்டின் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சில முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளார். அதில் கொடுங்கையூரில் கொட்டப்படும் குப்பையிலிருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்றவாறு திட்டம் இருப்பதாகவும், இந்த திட்டமானது சென்னை மாநகராட்சிக்கு புதியது என்றாலும், ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த நடைமுறையின் விளைவுகள் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் உடல்நலனுக்கும் ஆபத்து என்பது தான் உண்மை.
மேலும், சென்னை மாநகராட்சி திடக்கழிவைச் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் குப்பைகளின் மூலம் சிஎன்ஜி வாயு, மின்சாரம் எடுத்தல், மற்றும் எரி உலைகள் மூலம் குப்பைகளை எரிப்பதன் மூலம் வரும் சாம்பலிலிருந்து கற்கள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும், சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்ய முடியும் என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
குப்பைகளை எரி உலைகள் மூலம் எரித்தல் என்பது சூற்றுச்சுழல் மற்றும் உடல்நலத்திற்கும் தீங்கனாது ஆகும். பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆபத்தான குப்பைகளை எரிப்பதற்காக ரூ.2,045 கோடி செலவில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து சென்னை மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த திட்டத்தால் காற்று மாசுபடும், உடல் நலக்கேடுகள் ஏற்படும். இந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் டாமின் கூறியதாவது,"குப்பைகளை அவைகள் தோன்றும் இடத்திலே கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக மறு சுழற்சிக்கோ, மறு பயன்பாட்டுக்கோ உட்படுத்த முடியாத அல்லது பாதுகாப்பான கழிவு நீக்கத்துக்கு உட்படுத்த முடியாத நேரத்தில் பாதுகாப்பான மாற்றுகள் உள்ள பொருட்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும், குறைக்கவோ அல்லது தடையோ செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.