கானகம் குடியிருப்பு பிரச்சனை சிறப்பு தொகுப்பு சென்னை:1990-ஆம் ஆண்டு சென்னை தரமணியில் உள்ள கானகம் பகுதியில் சுமார் 6.50 ஏக்கர் பரப்பளவில் 30 பிளாக்குகளில் 480 வீடுகள் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு 1998-ஆம் ஆண்டு அரசு அரசு ஊழியர்களுக்கு வழங்கபட்டது. இரண்டு அடுக்குகளில் கட்டபட்டிருந்த இந்த குடியிருப்பின் நிலமை 2018-ல் மிகவும் மோசமானது.
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு என்றால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தளம் தான் ஆனால் இங்கு சற்று மாறுபட்டு முதலாவது தளமும், மொட்டை மாடியும் மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்தது. இதனால் அங்கிருந்த பலரும் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர்.
மேலும், தங்குவதற்கு வேறு வழியில்லாமல் அங்கேயே வசித்து வந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐஐடி வல்லுநர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் வல்லுநர்களின் ஆய்வறிக்கை குடியிருப்பு வாசிகளுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடம் என ஐஐடி வல்லுநர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அளித்தனர்.
இதனால் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த வீடுகளிலிருந்து வாடகை வீட்டிற்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அதனைத்தொடர்ந்து வல்லுநர்கள் கொடுத்த சான்றிதழ் அடிப்படையில் அந்த குடியிருப்பை இடித்து புதிய குடியிருப்புகளை கட்டிதர வாரியம் முடிவு செய்தது.
குடியிருப்பு விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவியதால் 2020-ஜூன் மாதம் அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டுவதற்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யபட்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி மானியம் போக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் வழங்க வேண்டும் என அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து குடியிருப்பில் இருக்கும் தேசப்பிதா மகாத்மா காந்தி நலசங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். குடியிருப்பு கட்டுவதற்காக ஒதுக்கபட்ட தொகை வேறு திட்டத்திற்காக செலவிடபட்டதாக அதிகாரி தரப்பில் சொல்லபட்டாலும், குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாகதான் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. கானகம் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதற்கு முன்பு எந்த திட்டத்தின் அடிப்படையில் வீடுகள் வழங்கபட்டதோ அதே திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி தர வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் மற்றும் அதில் குறிப்பிடபட்டுள்ள சாரம்சத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஏனென்றால் சென்னையில் அபாயகரமான கட்டடங்களை இடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி.ஏவும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில் இதற்கு என்ன மாற்று ஏற்பாடு என வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், குடியிருப்பு வாசிகளின் கோரிக்கை என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும்பட்சத்தில் அதனை நிறைவேற்ற அதிகாரிகள் ஏன் அலட்சியம் காட்டுகின்றனர். இந்த குடியிருப்பு விவகாரம் தொடர்பாக கானகம் குடியிருப்பின் தேசப்பிதா மகாத்மா காந்தி நல சங்கத்தின் தலைவர் சாந்தி ஜோசப் கூறியதாவது "இதற்கு முன்பு இங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றவர்களெல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இங்கு வர தொடங்கியுள்ளதாகவும், குடியிருப்புகள் அபாயகரமாக இருப்பதால் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி எல்.ஐ.ஜி முறையில் வீடுகளை கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எல்.ஐ.ஜி முறையில் இருக்கும் பல சலுகைகள் இ.டபிள்யு முறையில் இல்லை அதனால் தான் நாங்கள் பழைய எல்.ஐ.ஜி முறையில் வீடு வேண்டும் என நீதிமன்றத்திற்கு சென்றோம். ஆனால் அதிகாரிகள் அதை செவியில் எடுத்து கொள்ளாமல் 3 முறை குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியும் மக்கள் செல்ல மறுக்கின்றனர் என எங்கள் மீது குற்றம் கூறி வருகின்றனர். என்றார்.
இதுகுறித்து, சென்னை பெருநகர மாநகராட்சி ஆனையர் ராதாகிருஷ்னணிடம் கேட்டபோது, "தரமணி கானகம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு தொடர்பாக அங்குள்ள மண்டல அதிகாரிக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாகவும் விரைவில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறினார். மேலும். அங்குள்ள மக்களுக்கு குடியிருப்பு கட்டி முடியும் வரை மாற்று ஏற்பாடு என்னவோ அவைகளையும் செய்து தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:நாங்குநேரியைப்போல் மீண்டும் ஒரு சம்பவம்; பட்டியலின மாணவரை வீட்டிற்கு சென்று தாக்கிய மாணவர்கள்