மாவீரன் மூன்றாவது பாடல் வெளியானது:மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூலை மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் “வா வீரா” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கூட்டியது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி மற்றும் இப்படத்தின் இசை அமைப்பாளரான பரத் சங்கர் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் வெளியிட்ட படவா பட ஃபர்ஸ்ட் லுக்:நடிகர் விமல், சூரி கூட்டணியில் உருவாகியுள்ள மற்றொரு படம் படவா. இப்படத்தை நந்தா இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த இப்படம், விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லப்பர் பந்து டப்பிங் தொடக்கம்:பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கிரிக்கெட்டை கதை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த வாரம் காத்து வாங்கும் திரையரங்குகள்:இந்த வாரம் திரையரங்குகளில் இன்பினிட்டி, பம்பர், காடப்புறா கலைக்குழு, வித்வித்தை, ராயர் பரம்பரை ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளன. அனைத்துமே சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் என்பதால் பெரிதளவில் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. இதனால் திரையரங்குகளில் கூட்டம் இன்றி நிறைய காட்சிகள் ஷோ பிரேக் ஆகியுள்ளன. வெற்றி நடிப்பில் வெளியான பம்பர் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், திரையரங்குகளில் பார்வையாளர்கள் இன்றி காத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது திரையரங்கு உரிமையாளர்களை வருத்தமடைய வைத்துள்ளது.
தியேட்டரில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5% ஜிஎஸ்டி?: திரைரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படி, தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரிவிதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாயகுடு ட்ரெய்லர் வெளியானது:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். இப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. வடிவேலு, பகத் பாசில் ஆகியோரது நடிப்பு படத்திற்கு கூடுதல் வெற்றியைப் பெற்று தந்தது. தற்போது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வரும் 14ம் தேதி தெலுங்கில் இந்தப்படம் நாயகுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி தெலுங்கு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:Maamannan: மாமன்னன் வெற்றிக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின்