தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுத்தர மக்களின் கதை சொல்லி இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவலைகள்! - எந்த வயதில் மறைந்தார் டிபி கஜேந்திரன்

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். தான் இயக்கிய படங்களில் நகைச்சுவை வாயிலாக வாழ்வியல் கருத்துகளையும், நகைச்சுவையான நடிப்பாலும் மக்களை கவர்ந்த அவரின் மறைவிற்கு திரைத்துறையினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் திரைப்பயணம் குறித்த ஒரு சிறிய தொகுப்பு..

மறைந்த இயக்குனர் டி.பி.கஜேந்திரன் பற்றிய நினைவலைகள்..!
மறைந்த இயக்குனர் டி.பி.கஜேந்திரன் பற்றிய நினைவலைகள்..!

By

Published : Feb 5, 2023, 4:55 PM IST

மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் பூர்வீகம், தூத்துக்குடி. அவர் பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8-ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான் படித்தார். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிந்தவர். அப்பாவுக்கும் சினிமா கம்பெனியில் வேலை என்பதால் ப்ரிவியூ ஷோக்களைப் பார்த்து சினிமா மீது டி.பி.கஜேந்திரனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் காரைக்குடி பக்கம் உள்ள கண்டனூர் புதுவயலுக்கு அனுப்பிவைத்தார், இவருடைய தந்தை. பின்னர் கஜேந்திரன் மீண்டும் சென்னை வந்தார்.

1979-ஆம் ஆண்டில் கஜேந்திரனுக்கு திருமணம் நடந்தது. அதே ஆண்டு, அதே மாதம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார், டி.பி. கஜேந்திரன். 'மழலைப் பட்டாளம்' எனும் படத்தை கே.பாலச்சந்தர் தயாரிக்க, லட்சுமி இயக்கினார். அந்தப் படத்தில் வேலை செய் என்று பாலச்சந்தர் அனுப்பி வைத்தார். அதன் பிறகு 'தில்லு முல்லு', 'தண்ணீர் தண்ணீர்' படங்களில் அவருடன் வேலை பார்த்தார், டி.பி.கஜேந்திரன்.

இயக்குநர் பாலச்சந்தர் உடன் டி.பி.கஜேந்திரன்

பாலச்சந்தரின் படங்களில் பணியாற்றியபோது விசுவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அவரிடமும் சினிமா கற்றுக் கொண்டார். 'சம்சாரம் அது மின்சாரம்' உள்படப் பல படங்களில் அவருடன் பணியாற்றினார். அவர் மூலம் தான் முதல் படமான 'லக்கி ஸ்டார்' இயக்கும் வாய்ப்பும் டி.பி.கஜேந்திரனுக்கு கிடைத்தது. அதன் பிறகு 'வீடு மனைவி மக்கள்', 'எங்க ஊரு காவக்காரன்', 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'எங்க ஊரு மாப்பிள்ளை', 'தாயா தாரமா', 'நல்ல காலம் பொறந்தாச்சு', 'பெண்கள் வீட்டின் கண்கள்', 'கொஞ்சும் கிளி', 'பாட்டு வாத்தியார்', 'பாசமுள்ள பாண்டியரே', 'பட்ஜெட் பத்மநாபன்', 'சீனா தானா', 'மகனே மருமகனே' ஆகிய படங்களை இயக்கினார்.

விசு உடன் டி.பி.கஜேந்திரன்

அவர் இயக்கிய அனைத்துமே வெற்றிப்படங்கள், குறைந்தபட்சம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்கள். இவரது படங்கள் பெரிய கலைப் படைப்புகளும் இல்லை. நடுத்தர மக்களின் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்லி அதற்கு எளிய தீர்வை சொல்பவையாக அமைந்திருக்கும். அதையே தனது பாணியாகவும் டி.பி.கஜேந்திரன் வைத்துக்கொண்டார்.

எம்ஜிஆர் உடன் டி.பி.கஜேந்திரன்

அவரது உருவமும், பேச்சும் அவருக்கும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'பாரதி' படத்தில் 'குவளை கண்ணன்' கேரக்டரில் நடித்தது என் வாழ்வில் கிடைத்த பெரும்பாக்கியம் என்பார், டி.பி.கஜேந்திரன். நிஜமான 'குவளை கண்ணன்' குடும்பத்தார் தன்னைச் சந்தித்து, அவரைப் பார்த்தது போல இருந்தது என்று கண்ணீர் விட்டதைத்தான் தனக்கான விருதாக நினைக்கிறேன் என ஒருமுறை தெரிவித்திருந்தார், கஜேந்திரன்.

புது இயக்குநர்கள், புதுத் தயாரிப்பாளர்கள் யார் வந்து அழைத்தாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்றும்; பணம் போட முன்வந்தால், படம் இயக்கி கொடுக்கிறேன் என்பாராம். மேலும், 'என்னால் இழந்தவர்கள் யாரும் இல்லை. நான் இழந்தது ஏராளம். நட்புக்காக, நண்பனுக்காக, பழக்கத்துக்காக இழந்திருக்கிறேன். இதற்காக யாரையும் குற்றம் சொல்லவில்லை. சினிமா அப்படித்தான். அது எனக்குப் புரிந்திருப்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எனது சினிமா பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது' என அடிக்கடி சொல்வாராம். இவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கல்லூரி வகுப்புத் தோழரும் கூட. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கல்லூரித் தோழரான முதலமைச்சர் ஸ்டாலின் உடன் டி.பி.கஜேந்திரன்

இதையும் படிங்க: இயக்குனர் டிபி கஜேந்திரன் காலமானார்..! - கல்லூரி நண்பருக்கு முதலமைச்சர் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details