சிங்கப்பூர் எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு தனி அரங்கம்.. மக்களிடையே நல்ல வரவேற்பு! சென்னை: 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஏராளமான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். மேலும், மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியின் சிறப்புகள்: 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில், மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தென்னிந்தியப் புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கின்றார்கள்.
பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி வாசர்களைக் கவரும் விதமாக வித்தியாசமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அயலக தமிழர்கள் குறிப்பாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளான கவிதை, சிறுகதை, நாவல்கள் உள்ளிட்ட புத்தகங்கள் பெருமளவு மக்களுடைய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. 212 தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சிங்கப்பூர் எழுத்தாளர் கழக சங்கத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கம் கூறுகையில், "சிங்கப்பூர் படைப்புகள் தமிழக மக்களுடைய பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் குறித்துப் படிக்க ஆர்வமாக உள்ளனர்.
இதில், அதிக அளவில் விற்பனை ஆவது சிறுகதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் தான். இந்த புத்தகக் காட்சியில், எங்கள் படைப்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான, அரங்கு வைப்பதற்கு எங்கள் நாட்டு அரசு மிகவும் உதவிக்கரமாக இருந்தது. மேலும், அயல் நாட்டில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் தொடர்ந்து அரங்கேற்ற அந்தந்த அரசு முன் வந்தால், தமிழ் இலக்கியம் கடல்கடந்து இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய வாசகர், "நான் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளேன். இது தான் என் முதல் புத்தகக் காட்சி அனுபவம். இங்குத் தமிழ் மக்கள் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளை அதிக அளவில் வாங்கி செல்வதைப் பார்க்கையில் மிக மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து அயலக தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் புத்தக் காட்சியில் இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதல் இடத்தை தக்க வைக்கும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!