சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றில் பள்ளிக் கட்டணத்தில் முறைகேடு செய்யப்படுவதாக, அந்த முன்னாள் அறக்கட்டளையின் செயலாளர் பிரேம்குமார் என்பவர் லண்டனிலிருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், அதன் நிறுவனர் தனது தந்தை பெருமாள், தாளாளர் தனது தாயார் பேபி பெருமாள் எனக் குறிப்பிட்டுள்ளார். செயலாளராக தானும் மற்றும் பொருளாளராக தனது சகோதரன் ப்ரவீன் குமாரும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறக்கட்டளையின்கீழ் செயல்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளியை, தனது தாய் பேபி பெருமாள் 2018ஆம் ஆண்டு வரை நடத்தி வந்தநிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததால் சகோதரன் பிரவீன்குமார் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தான் இங்கிலாந்து நாட்டில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் காரணத்தினால், தன்னால் அறக்கட்டளையைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறும் பிரேம் குமார், தனது சகோதரன் பிரவீன் குமார் மீது சில குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்.
கடந்த சில நாள்களாக கிங்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வருவதாக பிரவீன் காவல் ஆணையருக்கு அளித்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஏழை மாணவர்களுக்குக் கல்வியைக் கற்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையைத் தனது சகோதரனும் அவரது மனைவியும் வீணடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலித்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்துக் கொடுக்கும் இந்த அறக்கட்டளையில், மீதமுள்ள 50 விழுக்காடு கட்டணத்தை தனியாக வங்கிக் கணக்கில் செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்துவதாக பிரவீன்குமார் மீது புகார்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கல்விக் கட்டண விவகாரத்தில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் பிரவீன் குமார் மீதும் அவரது மனைவி மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.