தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு செலவில் சிகிச்சை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் - facial disfigurement

ஆவடி அருகே முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

ஆவடி அருகே முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் சிகிச்சை
ஆவடி அருகே முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் சிகிச்சை

By

Published : Aug 18, 2022, 10:53 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில், ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்களின் மூத்த மகள், வீராபுரம் அரசினர் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

எல்லா குழந்தைகளும்போல, இந்த ஒன்பது வயது சிறுமியும் மூன்று வயது வரை இயல்பாகவே வளர்ந்துள்ளார். ஆனால் மூன்றரை வயதிற்கு பின்னர், சிறுமியின் முகத்தில் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. சிறுமியின் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி போன்றே, தோலிலும் அடுத்ததாக தோன்றியுள்ளது.

இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருப்பினும் இந்த பாதிப்பு குறையவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர், கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகியுள்ளனர்.

ஆவடி அருகே முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் சிகிச்சை

அங்கு அதிகமான கடன் பெற்று செலவு செய்து மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். இவை எல்லாவற்றையும் செய்தும் தங்களது மகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல சிறுமியின் முகம், வலது கண், கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைய தொடங்கியுள்ளது.

இதனால் சிறுமியின் முகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களே அவரை வெறுத்து ஓதுக்கும் வேதனையான சூழலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் ஆசிரியர்களும் அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி சிறுமியை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் கூறுகையில், “எல்லா குழந்தைகள்போல் என் குழந்தையும் இயல்பு நிலைக்கு வர வேண்டும். அதேபோன்று அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

ஏற்கனவே மருத்துவ செலவிற்காக 10 லட்சத்திற்கு மேல் செலவு செய்த நிலையில், தற்போது முக அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லாமல் உள்ளோம். என் குழந்தைக்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், “என்னுடன் படிக்கும் மாணவர்கள் என்னை தனிமைப்படுத்துகின்றனர். என்னுடன் விளையாட மறுக்கின்றனர். எனது சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடந்த கால மருத்துவ தகவல்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வருகேஷ் நேரில் வந்து சிறுமியிடம் கலந்துரையாடினார். மேலும் சிறுமி குறித்தும் குடும்ப சூழல் குறித்தும் பெற்றோரிடம் விசாரித்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு முழு உதவி செய்யும் எனவும் உறுதியளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “குழந்தையின் பாதிப்பு குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். உடனடியாக இதை கவனத்தில் கொண்டு சிறுமியை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் செலவை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.

மேலும் பள்ளியில் மாணவிக்கு ஏற்பட்ட அசெளகரியங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின் மருத்துவ சிகிச்சைகள் முடிவுற்றபின், குழந்தையின் குடும்பத்தினர் வசிக்க அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நெல்லையில் குழந்தை திருமணம்... பெற்றோர்களுக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details