தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Cauvery Issue: கர்நாடகாவை கண்டிக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா? - ஜெயக்குமார்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டிப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Published : Jul 22, 2023, 5:48 PM IST

jeyakumar
ஜெயக்குமார்

Cauvery Issue: கர்நாடகாவை கண்டிக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா? - ஜெயக்குமார்

சென்னை: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாநாட்டின் தீர்மானக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை22) நடைபெற்றது.

இந்த தீர்மானக்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான ஜெயக்குமார், பெஞ்சமின், பொன்னையன், செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; ''அதிமுக எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கின்ற நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தான் இருக்கிறார். இன்று அவருக்கு முதல் வகுப்பு வசதி தரப்பட்டுள்ளது. சிறையில் பல்வேறு விதிகள் மீறப்பட்டு வருகிறது. சிறை மருத்துவமனை அருகிலேயே வசந்த மாளிகை போல செந்தில் பாலாஜிக்கு வசதிகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதை அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், சிறைக்குச் சென்ற பின்னும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்கிறார். மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறது. இதனால் தான் அவரை அமைச்சராக இருந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதை செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதுகூட, 12 பேரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தார். அதேபோல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிடுவார். அந்த தைரியம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கிறதா?'' என்றார்.

''செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் தமிழ்நாட்டில் ஆட்சியே கவிழ்ந்துவிடும். அவருக்கு திமுகவை பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும் என்பதால் முதலமைச்சர் கோழையாக பயந்து கொண்டு ஆட்சி பறி போய்விடும் என்று அவரை அமைச்சரவையில் வைத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அப்படி என்றால் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், இப்பொழுது ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிமுறைகள் வகுத்திருக்கிறார்கள்.

திமுக கார்டு வைத்திருந்தால் தான், ஆயிரம் ரூபாய், அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் பணம் இல்லை என்று கூட கூறுவார்கள். தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்றால் திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒன்றிய, வட்ட, மாவட்டச் செயலாளர்கள் யாரை காட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் வழங்கப்படுமா? தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாத குடும்பத் தலைவிகள் நிச்சயமாக அவர்களின் கோபத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கச் செய்வார்கள்.

யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத ஈனத்தனமான செயல் மணிப்பூரில் நடைபெற்றுள்ளது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு மேற்கொண்டு பிரச்னையை வளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என்று மணிப்பூர் முதலமைச்சர் கூறி இருக்கிறார். அதை உடனடியாக செய்ய வேண்டும். இது போன்ற விவரங்களில் மரண தண்டனை வழங்கினால் தான் குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்கும்.

மேலும், அமைச்சர் பொன்முடி ஒரு என்ஜினையே கடத்திச் சென்றவர். திமுக அமைச்சர்கள் பலர் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட தொகை ஒரு சதவீதம் கூட வராது. இன்னும் 99 சதவீதம் மீதம் உள்ளது. திமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத் துறையின் வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். நிச்சயம் மாட்டுவார்கள். காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உரிமை பெற்று தந்தது அதிமுக. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்று அவர்களுடன் கட்டிப்பிடித்து விருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறார்.

தண்ணீர் தர முடியாது என்று கூறும் அவர்களை கண்டிப்பதற்கு முதலமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினும் அவர் அப்பா வழியை பின்பற்றுகிறார். அவர் அப்பா காலத்தில் தான் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி என்று 3 அணைகள் கர்நாடகாவில் கட்டினார்கள். இந்த அணைகள் கட்டப்படவில்லை என்றால் இன்று நமக்கு தண்ணீர் பிரச்னையே இருந்திருக்காது.

முதலமைச்சரின் நடவடிக்கைகளால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாக மாறி வருகிறது. தமிழ்நாடு ஆபத்தில் இருக்கிறது. இதிலிருந்து காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா பேராபத்தில் இருக்கிறது என்கிறார். கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான் முதலமைச்சர் உடையது'' எனக் கூறினார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்துவிட்டு காலம் தாழ்த்தி தற்பொழுது தான் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “எங்கள் கட்சி சார்பில் எங்கள் கருத்தை தெரிவித்து விட்டோம். இந்த கேள்வியை அண்ணாமலை இடம் கேளுங்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:பெண் காவலருக்கு லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details