சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோரில் நடப்பு நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து எனக் கூறப்படும் கோரமண்டல் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் சிக்கி 290 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 700 க்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தின் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்கும் பணியில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படாதது பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தனி மனித தவறால் ஏற்பட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா? என்ற பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ரயில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விபத்துக்கு பிறகு மத்திய அரசு ஸ்தம்பித்து உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து விதமான உதவிகளும் தயாராக இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.