சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன்10) இரவு சென்னை (Amit Shah visits Tamil Nadu) வருகிறார். நாளை காலையில் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமித்ஷா, அன்று மாலை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாக நேரம் கேட்டிருப்பதாக முதலில் தகவல் வெளியாகியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்தான் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சேலத்தில் உள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் இடது கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிகப்படியான வலியால் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும், எனவே, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அமித்ஷாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாகவும், ஆனால் நேரம் ஒதுக்கப்படுவது குறித்து பாஜக தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அமித்ஷா சந்திப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.