சென்னை: கண்ணகி நகர் 57வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் உஷாராணி. இவரது கணவர் பாலு. நேற்று மாலை உஷா ராணி வீட்டிற்கு அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்று உள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற நபர் உஷா ராணியை ஆபாசமாகப் பேசி கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இது தொடர்பாக, அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் கண்ணகி நகர் காவல் நிலையம் சென்று நேற்று மாலை புகார் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் வெங்கடேஷை அழைத்து எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், இன்று காலை உஷாராணியின் கணவர் பாலு வீட்டிற்கு வெளியே வாசலில் அமர்ந்திருந்த போது வெங்கடேஷ் பாலுவை மிரட்டித் தாக்கி உள்ளார்.
இதனைத் தட்டிக் கேட்ட மனைவி உஷாராணியின் கழுத்து, கை, காதில் நகத்தால் கீரி காயத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தைப் பக்கத்து வீட்டுக்காரர் குமார் தடுக்க முயன்ற போது, வெங்கடேஷின் மனைவி ராதிகா வெங்கடேஷிடம் கத்தியைக் கொடுத்ததால் கத்தியைக் கொண்டு குமாரின் விலா எலும்பில் குத்தி உள்ளார். இதில் குமார் பலத்த காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குமாரின் இரு மகள்களும் இதனை தடுக்க முயன்ற போது இருவரையும் கத்தியால் வெங்கடேஷ் தாக்கி உள்ளார். இதில் இருவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குமார் மற்றும் மகள்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.