சரியான நேரத்தில் CPR செய்து பெண்ணை காப்பாற்றிய காவலர்! சென்னை: பழைய பல்லாவரம், சுபம் நகர் பகுதியைச் சேர்ந்தவர், சீனிவாசன்(70). இவர் தனது மனைவி தமிழ்செல்வி(53) உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தமிழ்செல்வி தனது வீட்டின் உள்ளே தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பல்லாவரம் காவல் உதவி ஆய்வாளர் கோபால், தலைமை காவலர்கள் ரமேஷ், ஷேக் முகமது, மற்றொரு ரமேஷ் ஆகிய நான்கு பேர் அடங்கிய போலீசார் குழுவினர் தகவல் வந்தவுடன், விரைந்து சென்று ஏழாவது நிமிடத்தில், உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை உடைத்து, உள்ளே சென்று அங்கு தற்கொலைக்கு முயன்ற தமிழ்செல்வியை அதிரடியாக மீட்டனர்.
அதற்குள் தமிழ்செல்வி மூச்சு, பேச்சு இல்லாமல் மயங்கிக் கிடந்தார். உடனே திறமையாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கோபால், தமிழ்செல்வியின் உயிரை காப்பாற்றும் வகையில் உடனடியாக சிபிஆர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிர் காக்கும் (Cardiopulmonary Resuscitation - CPR) சிகிச்சை அளித்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நெஞ்சில் கையை வைத்து தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் தமிழ்செல்வி பலத்த பெருமூச்சு விட்டவாறு எழுந்தார்.
இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மேலும், போலீசார் தமிழ்செல்வியை உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் உயிர்ப்பிழைத்து நலமுடன் உள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தவுடன், ஏழாவது நிமிடத்தில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றதனால் இன்று ஒரு பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறு பெண்ணின் உயிரை காப்பாற்றி உள்ள சம்பவம் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இதனிடையே தற்போது இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனால், பல்வேறு தரப்பில் இருந்தும் பெண்ணின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்கொலை எதற்கு தீர்வு அல்ல அவ்வப்போது, நமது குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன காரணங்களால் எழும் சண்டைகளால் யாரும் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். எந்த பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு; அந்த நேரத்தில் அவற்றை மிகவும் எளிய முறையில் அமைதியாக கடந்து செல்வது எப்படி என்பது குறித்து மட்டும் சிந்தியுங்கள். அதேபோல, காவல் கட்டுப்பாட்டு எண் 100-க்கு இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலும் அழைத்து, வரப்போகும் ஆபத்தையும் அதன் விளைவாக ஏற்பட இருக்கும் இழப்புகளையும் தவிர்க்கலாம் என்பதை மறவாதீர்கள்.
இதையும் படிங்க:பட்டாக்கத்தியுடன் டாஸ்மாக் ஊழியரிடம் மாமூல் கேட்ட நபர் - வைரலாகும் வீடியோ