சென்னை:அடுத்த 100 ஆண்டுகளுக்கு சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு வருவதாகவும், மழைநீர் தேங்கி உள்ள பகுதியைக் கண்டறிய பொது மக்களும் உதவிடும் வகையில் https://chennaiwaterlogging.org என்ற ஆப் சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்டுள்ளது என சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், https://chennaiwaterlogging.org என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ' சென்னையில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கினால் அது தேங்கும் நேரம், வடிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் போன்ற பொதுவான தகவல்கள் நம்மிடம் இல்லை.
அதனைப் பல்வேறு இடங்களில் இருந்து தொகுத்து, தொழில்நுட்ப முறையில் பயன்படுத்த முடியுமா? என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான், இந்த ஆப். சென்னை மாநகராட்சி, சென்னை ஐஐடி ஆகியவையும் பல்வேறு தரவுகளை சேகரித்து வருகிறோம். எல்லா நேரங்களிலும் தரவுகளை நேரடியாக சென்று பெறுவது என்பது முடியாது.
இதனால் தான் மக்கள் தங்கள் தெருவில் உள்ள மழை நீர் தேங்கி நிற்பதைப் பார்த்து விட்டு, புகைப்படம் எடுத்து அனுப்பினால் அது பயனுள்ளதாக இருக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் மழைநீர் தேங்குவதற்கான தீர்வுகளை வகுப்பதற்கு திட்டமிட முடியும். இந்த ஆப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. https://chennaiwaterlogging.org என்ற ஆப்பிற்கு சென்று உங்கள் பகுதியில் தண்ணீர் எந்த அளவில் தேங்கி உள்ளது என்பதைப் படத்தினை பார்த்து அதில் உள்ள அளவினை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் அவர்கள் இருக்கும் இடத்தின் லோக்கேஷனை அனுப்பினால், தகவல்கள் எங்களுக்கு வந்து விடும். அதன் அடிப்படையில் மழைநீர் அகற்ற மாநகராட்சிக்கும் தகவல் அளிக்கப்படுவதுடன், தண்ணீர் தேங்குவதற்கான காரணங்களையும் கண்டறிந்து திட்டங்களை வகுக்கவும் பயனுள்ளதாக அமையும். சென்னை மாநகராட்சி நிறைய இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
நீர்வள ஆதாரத்துறையில் இருந்து சென்னையில் உள்ள ஆறுகளில் தண்ணீர் தேங்காமல் செல்வதற்கான வழிமுறைகளை மேற்காெண்டு வருகின்றனர். சென்னை 2.0 திட்டத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு அமைக்கப்பட்ட திட்டக்குழு அதற்கான திட்டங்களை வகுத்து அளித்துள்ளோம். மேலும் செய்ய வேண்டிய திட்டப் பணிகள் குறித்தும் அரசிற்கு தெரிவித்துள்ளோம். அதனை அரசாங்கமும் செயல்படுத்தி வருகின்றனர். சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் போது சாய்வுதளத்தில் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முன்னோக்கு பார்வையுடன் மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தண்ணீர் அதிகளவில் சேரும் போது ஒரு இடத்தில் அதிரித்து பின்னர் வடிந்து செல்லும். சமதளமாக உள்ள பகுதிகளில் தண்ணீர் செல்வதில் உள்ள பிரச்னை சென்னையிலும் இருக்கிறது, தண்ணீர் தேங்கும் பிரச்னை இல்லாத வகையில் தான் கால்வாய்கள் வடிமைக்கப்பட்டு வருகிறது. குழுவில் இருந்து தொழில்நுட்ப ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முன்னோக்கு பார்வையுடன் ழைநீர் தேங்காத வகையில் வடிகால் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான அறிக்கையை படிப்படியாக அரசிற்கு அளித்து வருகிறோம்.
இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த அறிக்கை அரசிற்குப் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும்போது அடுத்து வரும் ஆண்டுகளில் கால்வாயில் மழைநீர் வரும் அளவினை கணக்கிட்டுத் தான் அமைப்போம். 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் மழையின் அளவினை கருத்தில் கொண்டு அமைக்கப்படும். 24 மணி நேரத்தில் 180 மில்லி மீட்டர் மழை பெய்தால் தண்ணீர் செல்லும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனைவிட கூடுதலாக மழை பெய்தால் சிறிது நேரம் தண்ணீர் நிற்கத்தான் செய்யும். மேலும் பருவநிலை மாற்றங்களையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கிறோம். மழைநீர் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமலும், அடைப்புகள் ஏற்படாமலும் தடுக்க வேண்டியது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகள் ஆகும். மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும்போது மனிதர்கள் இறங்கி மண் அள்ளும் வகையில் 5 மீட்டர் இடைவெளியில் தூவரங்கள் அமைத்துள்ளனர்.
இதனால் மழைநீர் வடிகால் அடைப்பு இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும்’ எனத் தெரிவித்தார். https://chennaiwaterlogging.org என்ற ஆப் குறித்து சென்னை ஐஐடி மாணவர் கூறும்போது, ’நவம்பர் 4ஆம் தேதி முதல் இந்த ஆப் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பெறும் தகவல்களை வைத்து சென்னை மாநகராட்சி மேற்காெள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து திட்டங்களைத் தீட்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணையில் வெள்ள அபாயம் - முதல் கட்ட எச்சரிக்கை!