சென்னை:கே.கே.நகர் 14வது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ் (45). மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். வடபழனியில் அச்சு நிறுவனம் நடத்தி வந்த சுரேஷ், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாயை இழந்துவிட்டதால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவர் சுரேஷ் சென்றுவிட்டதாக ராதா போலீசாரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மாயமான சுரேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 4) மாலை மெரினாவில் அவ்வையார் சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் புகார் அளிக்கச் சென்ற ராதாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்ற போது, இறந்தவர் தமது கணவர் தான் என்பதை உறுதி செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்த சுரேஷ் அதற்கு அடிமையாகி உள்ளார். இதன் மூலம் ரூ.16 லட்சத்தை அவர் இழந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே சுரேஷ் எழுதிய உருக்கமான கடிதத்தில் "அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துவிட்டேன். அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை. உங்கள் அனைவரிடம் இருந்தும் பிரியா விடைபெறுகிறேன். மதிப்பு மிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னை போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டுச்செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்" என கூறியுள்ளார்.
ஏற்கனவே தாம்பரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் ரம்மி தடை சடத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது மர்மமாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பா.ஜ.க.வின் வெறுப்பரசியல் இந்த மண்ணில் ஒருபோதும் எடுபடாது; ஆர்.எஸ்.பாரதி கண்டனம்