சென்னை:ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் மூதாட்டிகளை குறி வைத்து மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை கொள்ளையடிப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து உள்ளது. குறிப்பாக அந்த நபர் முதியவர்களிடம் தான் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் தமிழக அரசின் முதியவர்களுக்கு ஒரு சவரன் நகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஸ்லீப் ஒன்றையும் முதியவர்களிடம் கொடுக்கிறார். பின்னர் நகை அணிந்திருந்தால் முதியோர் உதவி தொகை தர மாட்டார்கள் என முதியவர்களிடம் கூறி பர்ஸில் நகைகளை வைக்குமாறு கூறி, ஸ்லீப்பை நான் கூறும் அலுவலகத்தில் கொடுத்தால் பணம் மற்றும் தங்கம் கொடுத்துவிடுவார்கள் என முதியவர்களிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி மூதாட்டிகள், அலுவலகத்திற்கு சென்ற பின் அந்த நபர் நகைகளை சுருட்டிக்கொண்டு தப்பிச்செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை போலீசார் கண்டுபிடித்தனர். குறிப்பாக கடந்த 1 மாதத்தில் மூன்று மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி 10 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக புகார்கள் வந்து உள்ளது.
இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பழைய குற்றவாளி மாற்றுத்திறனாளியான சித்ரவேல் (வயது 45) என்பது தெரியவந்தது.
இதை அடுத்து சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து தனிப்படை போலீசார் மதுரை எழில் நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த சித்ரவேலுவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சித்ரவேலிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது. சிறுவயதிலேயே குற்றச்செயலில் ஈடுபட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்ற சித்ரவேல், பின்னர் வெளியே வந்து கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வந்து உள்ளார்.