சென்னை:திருநெல்வேலி மாநகர போலீசால் தேடப்பட்டு வந்தவர் காஜாமொய்தீன் (57). இந்த நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து இவர் இலங்கை வழியாக வந்தபோது, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் இன்று (மே 20) சிக்கினார். திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன், பாஸ்போர்ட்கள் தயார் செய்து சிலருக்கு சட்டவிரோதமாக ரகசியமாக விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மேலப்பாளையம் போலீஸ் காஜாமொய்தீன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கியது, மோசடி, சதி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் காஜாமொய்தீன் தலைமறைவாகி வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டார்.
இதனால் திருநெல்வேலி மாநகர போலீஸ் ஆணையரகத்தின் துணை ஆணையர் காஜாமொய்தீனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அத்தோடு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சவுதி அரேபியா நாட்டில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.