சென்னை: கோட்டூர்புரம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி, பூட்டிய வீட்டில் 450 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கொள்ளையர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் கிடைத்த 10 கைவிரல் ரேகை பதிவுகளை வைத்து, தமிழ்நாட்டில் திருட்டு குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டு, கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் எந்த விரல் ரேகைகளும் ஒத்துப்போகவில்லை.
இந்நிலையில் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் தமேசையா அருள்ராஜ், வினோத் ஆகியோர் தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தில் (NAFIS) பராமரிக்கப்படும் மென்பொருள் உதவியுடன் வெளிமாநிலங்களை சேர்ந்த குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
இதில், கோட்டூர்புரம் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி ஒருவர், அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் குற்றவாளியை அடையாளம் கண்ட விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: போலி நகைகளை வங்கியில் வைத்து ரூ.22 லட்சம் மோசடி - இலைஞர் கைது