தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சென்ட்ரலில் ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்.. - பிரபாஸ் மண்டல்

Abducted Child Rescued by Police: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே தனிப்படை போலீசார், குழந்தையை பத்திரமாக தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்..
சென்னை சென்ட்ரலில் ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 5:05 PM IST

சென்னை:ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி நந்தினி - லங்கேஸ்வர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் திருப்பதியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நந்தினி ஒடிசா மாநிலம் செல்வதற்கு தனது ஒரு வயது குழந்தையுடன் நேற்று இரவு (அக்.15) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

ரயிலுக்காக நடைமேடை 8-ல் நந்தினி காத்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு தம்பதியினர், தாங்களும் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒடிசா செல்ல வேண்டும் எனவும் நந்தினியிடம் பேச்சு கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது நந்தினி, கழிவறைக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி தனது குழந்தையை அந்த தம்பதியிடம் பார்த்துக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து நந்தினி கழிவறையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது, தனது ஒரு வயது குழந்தையுடன் அந்த தம்பதி அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதையடுத்து அவர் ரயில் நிலையம் முழுவதும் குழந்தையை தேடிப் பார்த்து குழந்தை எங்கும் கிடைக்காததால் சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, போலீசார் 2.45 மணிக்கு குழந்தை காணாமல் போனதாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அந்த தம்பதியினர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

அந்த ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்ததில், மதுரவாயல் அடுத்த பகுதியில் அந்த தம்பதியை இறக்கி விட்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சென்ட்ரல் ரயில்வே போலீசார் குழந்தையை மீட்பதற்காக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது குன்றத்தூரில் ஒரு தம்பதியினர் குழந்தையை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்து, ரயில்வே தனிப்படை போலீசார் குன்றத்தூர் விரைந்து சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாஸ் மண்டல் மற்றும் நவிதா என தெரியவந்துள்ளது.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட இவர்கள் உண்மையாகவே கணவன் - மனைவியா? இல்லை குழந்தை கடத்துவதற்காக கணவன் மனைவி போல் நடித்து வருகிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப் பாதை போலீசார் குழந்தையை பத்திரமாக தாயிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு மூன்று மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட ரயில்வே தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க:பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முகப்பில் தொங்கிய மனித உடல் - பயணிகள் அதிர்ச்சி..!

ABOUT THE AUTHOR

...view details