சென்னை: வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் (Parliament Election 2024) நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் ஆளும் திமுக முதன் முறையாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளது. இதற்கான பயிற்சி பாசறைக்கூட்டம் நாளை மறுநாள் (ஜூலை 26) திருச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
நேற்றைய தினம் (ஜூலை 23) ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவை தேர்தலை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் அரசியல் எதிரிகளின் பொய்ப் பிரசாரங்களை தடுக்கவும், தெரு முனை மற்றும் வீட்டு வாசல் கூட்டங்கள் மூலம் வாக்காளர்களை சந்திக்கவும், திமுக பூத் ஏஜெண்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பூத் ஏஜெண்டுகளுக்கு இந்த பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை மறுநாள் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி முகவர்களுக்கான முதல் பயிற்சிக் கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது. திமுக மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, பூத் கமிட்டிகளை அமைத்தது. அனைத்து பூத் ஏஜெண்டுகளின் கூட்டத்தை ஒரே கூட்டமாக நடத்தாமல், பயிலரங்குகள் எப்போது நடைபெறும் என்பதை மண்டல அளவிலான கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
திருச்சியில் நடைபெறும் முதல் பயிலரங்கில், திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் முகவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் திமுக வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு போலி வாக்காளர்களை வைத்து வாக்காளர் பட்டியலை அதிகப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வரும் தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பங்கு மிக முக்கியமானது என்று ஸ்டாலின் கூறினார். இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது போன்றே முக்கியமானது என கடிதத்தில் கூறியிருந்தார்.