சென்னை:2020ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதான கார்த்திக் மற்றும் ஐயப்பனை வழக்கு விசாரணைக்காகப் புழல் சிறையிலிருந்து நேற்று ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது இரண்டாவது தளத்தில் உள்ள 20ஆவது கூடுதல் நீதிமன்றத்திற்குச் செல்ல தரைதளம் வழியாகக் குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் போது, திடீரென ஒரு முதியவர் ஒரு அடி நீளமுள்ள கத்தியால் குற்றவாளிகளை வெட்ட முயன்றார்.
இதனைக் கண்ட காவலர்கள் உடனடியாக அந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை அழைத்துச் சென்றனர். பின்னர் குற்றவாளிகளைக் கத்தியால் வெட்ட முயன்ற முதியவரை பெரிய மேடு காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த முதியவர், சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்த உதயகனி(60) என்பது தெரியவந்தது.