சென்னை:தமிழ்நாடு அரசு நாட்டுக் கோழியினங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சி அளித்து வருவதாகவும், நாட்டு கோழியினங்களை வளர்த்தால் அதிகளவில் சம்பாதிக்க முடியும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் பருவநிலைக்குத் தகுந்த பாரம்பரிய முறையிலான நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த தேசிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில், நாட்டுக் கோழிகளுக்கான கண்காட்சியில் பெருவிடை கோழி, சிறுவிடைகோழி, கலப்பினக்கோழிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார், ”தமிழ்நாடு நாட்டுக் கோழியை வளர்ப்பதற்கான புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நாட்டுக்கோழியில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ் அசீல், கலப்பின கோழிகள் போன்றவை உள்ளது. கரூரில் பெருவிடை கோழிகளை வளர்ப்பதற்கு 200 கோடியில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிறுவிடை கோழிகளை வளர்ப்பதற்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோழிகளை வளர்க்க நினைப்பவர்கள் இதற்கான பயிற்சியைப் பெற்று கோழி வளர்ப்பில் ஈடுபடலாம்” என தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நாட்டுக் கோழி வளர்த்தல் குறித்த கருத்தரங்கு கண்காட்சியில் பெருவிடை சண்டைக் கோழியைக் காட்சிக்கு வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த நவாஸ்கான், சண்டைக்கோழிகளை ஆர்வத்துடன் வளர்த்து வருகிறேன். ஆனால் தற்பொழுது கோழிச்சண்டைகளுக்கு தடை விதித்துள்ளதால், கண்காட்சியில் கோழிகளை வைத்து வருகிறோம். மேலும், பெருவிடை கோழியை வளர்த்தால் லாபம் கிடைக்கிறது” என தெரிவித்தார்.
நாட்டுக் கோழி வளர்ப்பவர்கள் பல்லாவரத்தைச் சேர்ந்த சிறுமி லத்திகா கூறும்போது, ”எனது தந்தையுடன் சேர்ந்து கோழிகளை வளர்த்து வருகிறேன். எனக்கு செல்லப்பிராணியாக கோழிகளை வளர்ப்பது மிகவும் பிடிக்கும்” என தெரிவித்தாா். அண்ணாநகரை சேர்ந்த ஜெம்ஸ் கூறும்போது, ”பெருவிடை கோழி இனத்தில் கால்களில் கத்தி இல்லாமல் சண்டையிடும் கோழி இனத்தை வளர்த்து வருகிறேன். நாட்டுக்கோழி இனத்தை வளர்ப்பதில் எந்தவிதமான சிரமமும் இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலம் இங்கே... மருத்துவமனை எங்கே? மதுரை எய்ம்ஸிற்கு படையெடுத்த எம்.பி.க்கள்