சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர், ஷாலினி(36). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வீரமணி என்பவரை காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தார், அவரிடம் பேசாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஷாலினியை அவரது அண்ணன் சதீஷ் உள்ளிட்ட குடும்பத்தார் வந்து தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த ஷாலினி சைதாப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குடும்பப் பிரச்னை தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்று, வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் அருண் என்பவர், சம்பவ இடத்திற்குச் சென்று ஷாலினியின் அண்ணன் சதீஷ் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தார் விசாரணைக்கு வரமுடியாது எனக் கூறி போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சதீஷ் கையில் வைத்திருந்த கூர்மையான சாவியால், உதவி ஆய்வாளர் அருணை குத்திவிட்டு, தப்பி ஓட முயன்றுள்ளார்.