சென்னை:கனடா நாட்டில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஸ்ரீதரன்தாஸ்ரத்தினம். இலங்கையை, பூர்வீகமாக கொண்ட இவர் கனடா நாட்டு சிட்டிசனாக குடியுரிமை பெற்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர் இந்தியாவில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களை சுற்றி பார்ப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.
அதன் பிறகு சிந்தாதிரிபேட்டை மூசாசாகிப் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு ஆன்மிக சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் கடைசியாக திருப்பதி சென்று விட்டு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கனடா செல்ல திட்டுமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தி.நகரில் பாரின் எக்ஸ்சேஜ் அலுவலகத்தில், டாலரை, இந்திய ரூபாயாக மாற்றிவிட்டு திரும்பும் போது டிப்டாப் ஆசாமி ஒருவர் அவரிடம் வந்து பேச்சு கொடுத்துள்ளார். வெளிநாட்டை சேர்ந்தவரா என்று கேட்டு கொண்டே எங்கே தங்கி உள்ளீர்கள், நானும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவன் என்றும் கூறியுள்ளார். தி நகரில் ஹோட்டல் அறைகள் சரியில்லை, நீங்கள் தங்கியுள்ள அறையை காட்டுமாறும், தனக்கும் ஒரு அறை எடுத்துக் கொடுக்குமாறு பேச்சு கொடுத்துள்ளார்.
அதனை நம்பிய அந்த முதியவரும், அவர் தங்கியிருந்த அறைக்கு ஆட்டோ மூலமாக அவரை அழைத்துச் சென்று ஹோட்டலை காட்டியுள்ளார். பின்னர் முதியவரின் அறைக்கு சென்று பேசி கொண்டிருந்த போது, கதவை தட்டி உள்ளே நுழைந்த நபர் ஒருவர் கதவை தாழிட்டுவிட்டு, தான் கமிசனர் அலுவலகத்தில் இருந்து வரும் ஸ்பெசல் போலீஸ் எனவும், நீ போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மிரட்டி பாஸ்போர்ட், செல்போன்களை பிடிங்கி வைத்து கொண்டு அவரை மிரட்டி அமர வைத்து விட்டு அறையை சோதனையிடுவது போல நடித்ததாக கூறப்படுகிறது.