சென்னை:மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடைகள் இரண்டை கையில் எடுத்து வந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் பயணியை நிறுத்தி சுங்கு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதில் அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஒரு கூடையில், தேகுஸ் லிஷார்டு எனப்படும் ராட்ஷச விஷ பல்லி குட்டிகள் 4 இருந்தன. இந்த வகை ராட்ஷச பல்லிகள் பிரேசில், தென் அமெரிக்கா, வட அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அடர்ந்த வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஐந்து அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த பல்லிகள் அதிக விஷத்தன்மை கொண்டது.
மற்றொரு கூடையை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் ரக்கூண் விலங்கு இருந்ததை கண்டுபிடித்தனர். வட அமெரிக்கா காடுகளில் காணப்படும் குள்ள நரி வகையைச் சேர்ந்த இந்த ரக்கூண்கள் அதிகபட்சம் இரண்டரை அடி உயரம் வளரக்கூடியவை. இரண்டரை அடி அளவில் மட்டுமே வளரக்கூடியதாக இருந்தாலும் 5 கிலோ முதல் 26 கிலோ வரை எடை இருக்கும். மேலும் கொடூரமாக தாக்கும் தன்மை கொண்டது என்பதால் இது ஆபத்தான விலங்காகவே பார்க்கப்படுகிறது.