சென்னை:ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில், வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 5 நாள்கள் பணி நடைபெற்றுக்கொண்டு வந்த நிலையில் நேற்று (மே 8) கண்ணையன் என்ற முதியவர் ஒருவர் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் இன்று (மே 9) உயிரிழந்தார். இவரின் இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பசுமை வழிச்சாலையில் உள்ள பறக்கும் ரயில்வே பாலத்தின் கீழே போராட்டத்தில் ஈடுபட்டனர்.