சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார். அதேபகுதியில் வசிக்கும் திருமலை (38), என்பவரது மனைவி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி கோபித்துக்கொண்டு சென்றதற்கு ராஜேந்திரன் தான் காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த திருமலை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரன் வயிற்றில் குத்தியுள்ளார்.
இதில், ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே மயங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், திருமலையை மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கி மதுரவாயல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ராஜேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:மரத்தில் அழுகிய நிலையில் தொங்கிய ஆண் சடலம்; அருகில் கிடந்த பெண் சடலம் - பின்னணி என்ன?