தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போனை திருடி ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த திருடன்.. ஆட்டோவில் சிக்கிய ரூ 1.25 கோடி ஹாவாலா பணம்? - today latest news

Chennai Crime News: செல்போனைத் திருடி ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்து சிக்கிய திருடன், ஆட்டோவில் சிக்கிய 1.25 கோடி ரூபாய் பணம் உள்ளிட்ட சென்னையில் நடந்த குற்றச் செய்திகள் குறித்து காணலாம்.

Chennai Crime News
செல்போனை திருடி ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த திருடன் - ஆட்டோவில் சிக்கிய ரூ 1.25 கோடி ஹாவாலா பணம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:22 AM IST

சென்னை: சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர், மரிய ஜோசப். இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது, தனது செல்போனை தொலைத்து உள்ளார். இந்த நிலையில், அவரது வங்கி பரிவர்த்தனங்களை சோதனை செய்தபோது, அதிலிருந்து 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மரிய ஜோசப் சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதை அடுத்து, தொலைந்து போன செல்போனில் இருந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நெட் பேங்கிங் மூலமாக 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டு, அதன் மூலமாக அமேசான் ஆன்லைன் தளத்தில் ஆறு ஐபோன்கள் வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, செல்போன் எண் மற்றும் அமேசான் டெலிவரி ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நூறுதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஆட்டோவில் சிக்கிய ரூ 1.25 கோடி ஹவாலா பணம்?சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை, போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில், ஆட்டோவில் பெரிய பையுடன் இருந்த வடமாநில நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அதில் கட்டுக் கட்டாக 1.25 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ஆட்டோவில் கொண்டு வந்த 1.25 கோடி ரூபாய் பணம், விஜயவாடாவில் இருந்து, சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை வியாபாரி விகாஸ் பவர் என்பவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இவ்வளவு பணம் கொண்டு வந்ததற்கு எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பதால், வட மாநில நபரை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 6 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்:சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில், “வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் தீபக்குமார், கொத்தவள்சாவடி சட்ட ஒழுங்கு ஆய்வாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்பேடு காவல் ஆய்வாளராக இருந்த பிரவீன்குமார், புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செல்வகுமார் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சேட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவான்மியூர் காவல் ஆய்வாளராக இருந்த மீனாட்சி சுந்தரம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவை ஜோஸ்ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளையில் திடீர் திருப்பம்! கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கலா? தனிப்படை அதிரடி வேட்டை!

ABOUT THE AUTHOR

...view details