சென்னை: விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38) பிளம்பரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர். தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டதால், தனலட்சுமி தான் பணிபுரியும் நிறுவனத்தில் கார்த்திக் (42) என்பவருடன் நட்பு பாராட்டியுள்ளார். கார்த்திக், தனலட்சுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறி கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உதவி புரிந்துள்ளார்.
நாளடைவில் தனலட்சுமிக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த பழக்கம் திருமணத்தை தாண்டிய உறவாக மாறி இருவரும் கடந்த 5 வருடங்களாக வேளச்சேரியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமி, கார்த்திக்கிடம் இருந்து பிரிந்து குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் காதலி தனலட்சுமி அவரது கணவருடன் சென்றதால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 7ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு சென்று காதலி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது இளஞ்செழியனின் மகனுக்கும், கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் மதன்குமாரின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.