சென்னை: வளசரவாக்கம் அடுத்த ராமபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் கழிவறைக்குச் சென்ற போது அருகில் இருக்கும் மர்ம நபர் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து நிறுவன மேலாளரிடம் கூறியதையடுத்து, அங்குச் சென்று பார்த்த போது நபர் ஒருவர் கழிவறையிலிருந்து தப்பி ஓடினர். அப்போது அவர் அங்குத் தற்காலிக ஊழியராகப் பணி புரியும் பூந்தமல்லி, மேல்மா நகரைச் சேர்ந்த தமிழரசன் என்கிற ஆகாஷ் (23) எனத் தெரியவந்தது. பின்னர், அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார்.