சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மூதாட்டிகளிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசு உதவித்தொகை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அலுவலர்கள் பார்க்கும்போது ஏழைபோல் இருக்க வேண்டும் என்பதற்காக நகைகளைக் கழற்றி துணியில் மடித்து வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய மூதாட்டிகள் தங்களது நகைகளைத் துணியில் மடித்துவைத்துள்ளனர். அப்போது அவர்களது கவனத்தை திசை திருப்பி நகைகளை அந்த அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். இதேபோல் கடந்த மாதம் மட்டும் இரண்டு மூதாட்டிகளிடமிருந்து 2 சவரன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்கள் இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்நபரைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
அதனடிப்படையில், பெரம்பூர் காமராஜ் நகரைச் சேர்ந்த திருமலை (45) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அரசு உதவித்தொகை வாங்கித் தருவதாக மூதாட்டிகளிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும், இது குறித்து காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக் கடையில் 28.5 சவரன் நகையைத் திருடிய ஊழியர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு