சென்னை:தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவரான கண்ணதாசன் நேற்று (பிப். 27) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 'நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பாஜக வென்ற 134ஆவது வார்டில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு வீடியோ ஒன்று யூ-ட்யூப்பில் வந்தது.
அந்த வீடியோவில் பேசிய நபர் ஒருவர் தன்னை ஒரு இந்து தீவிரவாதி எனவும்; ஈவே.ரா, அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் எனவும் கூறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்களை வன்மத்துடன் கொலை செய்ய வேண்டும் என அந்நபர் கூறியுள்ளார். அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், வீடியோவை வைத்து நடத்திய விசாரணையில் அவதூறு பரப்பும் வகையில் பேசியது அசோக் நகரைச் சேர்ந்த ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் கிரைம் காவல் துறையினர், அவர் மீது கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று (பிப் 28) கைது செய்தனர்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது கைது செய்யப்பட்ட இவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், 'அம்பேத்கர், ஈவேரா குறித்து இனி அவதூறாகப்பேசினால் எதிர்மறை விளைவுகள் கடுமையாக இருக்கும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:காவலர்களைத் தாக்கிய திருடர்கள் மீது வழக்குப்பதிவு