சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) அறுப்பு ரவி (29). ரவுடியான இவருக்குத் திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், 11 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். ரவி மீது புளியந்தோப்பு, கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி ரவி மதுபோதைக்கு அடிமையானதால், அவருக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விஜயலட்சுமி எருக்கஞ்சேரி பகுதியில் வசிக்கும் தனது தந்தை வெங்கடேசன் வீட்டில் வசித்துவந்தார்.
நேற்று (மார்ச் 31) இரவு ரவி மதுபோதையில் தனது மனைவியைப் பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனாரிடம் மனைவி எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு, வெங்கடேசன் எனது மகள் விஜயலட்சுமி திருமண நிகழ்ச்சி சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரவி என்னைக் கேட்காமல் எனது மனைவியை எப்படி திருமண நிகழ்ச்சி அனுப்பிவைத்தீர்கள் என்று கூறி தகராறு செய்ததுடன் மாமனார் வெங்கடேசனை அடித்து, உதைத்து வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.