தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் ஆண்டியூர் தாலுகாவிலுள்ள புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அனுபுராஜ் குண்டல். இவர் காவல் துறையில் பணியாற்ற வேண்டும் எனத் தீராத ஆசை கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவர் வீரப்பன் கும்பலில் சேர்ந்தார்.
இந்நிலையில், வனத் துறை அலுவலரை கடத்திய வழக்கில், அனுபுராஜ் 17 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 2016ஆம் ஆண்டு, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த ரேவதி என்ற ஆதரவற்ற பெண், பெங்களூருவில் வீட்டு வேலை செய்து வாழ்ந்துவந்தார். அவர் தனது 18 வயதில் தன்னை மும்பைக்கு விற்பனை செய்ய முயன்ற ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் 2015ஆம் ஆண்டு விடுதலையானார்.
இதற்கிடையே, மைசூருவிலுள்ள சங்கல்பா தியேட்டர் குழு, சிறைக் கைதிகளை அனைவருடனும் பழகும் வகையில் நாடகக் குழு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அப்போது, மைசூரு சிறையிலிருந்த அனுபுராஜ், பெங்களூரு சிறையில் இருந்து ரேவதி ஆகியோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.