ஊதிய உயர்வு, மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், பட்டமேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். அரசுத் தரப்பில் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருவதால் அரசு மருத்துவமனைகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், இது குறித்து பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் லட்சுமி நாராயணன், "தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவசரப் பிரிவுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்திவருகிறோம். ஏற்கெனவே அரசு எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியில் ஒரு இன்ச் கூட நகரவில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதில் தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். அதற்காக எங்களுடைய ஐந்து மருத்துவர்கள் தற்போது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராடிவரும் நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தீபாவளியின்போது எங்களைப் போராட்டத்தில் தள்ளிவிட்டு அமைச்சர் ஊருக்குச் சென்றுவிட்டார்.
டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளதால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று செயலாளர் கூறுகிறார். டெங்குவை காரணம்காட்டி எங்களை ஏமாற்றிவருகின்றனர். டெங்கு காய்ச்சலை வைத்து எங்களுக்கும் மக்களுக்கும் நடுவே அரசு மோதலை உண்டாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மக்கள் எங்கள் நிலைமையை உணர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கைவைத்தார்.