சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாபேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி தோட்டம் சேகர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் வைத்தே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தோட்டம் சேகர், அதிமுகவில் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தோட்டம் சேகரின் 2ஆவது மனைவியான மலர்கொடி (50), எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அழகு ராஜா (30) மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அழகு ராஜா தனக்கு தொடர்புடைய வழக்கு ஒன்றில் தனது தாய் மலர்கொடி மற்றும் நண்பர்கள் ஆறுமுகம், விஜயகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். பின்னர் மலர்கொடி, மணிகண்டன், விஜயகுமார் ஆகியோர் ஆட்டோவிலும், அழகு ராஜா மற்றும் ஆறுமுகம் இருசக்கர வாகனத்திலும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காசினோ திரையரங்கம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்த போது 4 இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அழகு ராஜாவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனைக் கண்ட மலர்கொடி ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடிவர அவரையும் அந்த கும்பல் தோள்பட்டையில் வெட்டியது. தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் அழகு ராஜா தன்னிடம் இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்றை அவர்கள் மீது வீசியுள்ளார். பெரும் சத்ததுடன் வெடிகுண்டு வெடிக்க, அதிர்ச்சியடைந்த ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பெண் வழக்கறிஞர் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி ரவுடி கும்பல் தாக்குதலில் அழகு ராஜா, ஆறுமுகம் மற்றும் மலர்கொடி ஆகியோருக்கு தலை, தோள்பட்டை, கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அழகு ராஜா இருந்திருக்கலாம் எனவும் அதனை காரணம் வைத்தே அப்பாஸின் மைத்துனர் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் அப்பு உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் அழகு ராஜாவைக் கொல்ல இந்த கொலை முயற்சியை அரங்கேற்றியிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் அந்த கும்பலை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். அழகு ராஜாவிடம் வெடிக்காமல் இருந்த ஒரு நாட்டு வெடிகுண்டையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.