சென்னை: நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர் சங்கர். இவர் கீழ்ப்பாக்கம் ஹார்லே சாலையில் உள்ள பிஎம்எஸ் டவர் கட்டடத்தில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு சங்கரின் மனைவி வாணியும், மகள் ஹரிணியும்(5) இரவு நேரத்தில் சென்று அவரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்றிரவு வாணி மகளுடன் கணவரை பார்க்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் கட்டடத்தின் நுழைவு வாயிலில் உள்ள 15 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இரும்பு கேட் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது விழுந்துள்ளது. அதாவது சிறுமி விளையாடிக்கொண்டிருப்பதை கவனிக்காத கடையின் கேட்டை மூட காவலாளி முயற்சித்துள்ளார்.
அப்போது கேட் சிறுமி மீது விழுந்துள்ளது. இதனால் சிறுமிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து பெற்றோர் சிறுமியை ஆட்டோ மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இரும்பு கேட் எவ்வாறு விழுந்தது என்பது குறித்து ஆய்வு விசாரணை நடத்திவருகின்றனர். கேட்டை மூடிய காவலாளி சம்பத் மற்றும் துணிக்கடையின் மேலாளர் சீனிவாசன் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு