சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ஏ++ ரவுடி சைலு என்கிற சைலேந்தர். இவர் மீது சேலையூர், பீர்க்கங்கரணை, கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, குன்றத்தூர், மணிமங்கலம், ஊத்துக்கோட்டை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்பட 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொலை, கட்டப்பாஞ்சாயத்து, ஆள் கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது என்று அடுக்கடுக்கான குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. சுமார் நான்கு ஆண்டுகளாக காவல்துறை கைகளில் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவுடி சைலேந்தர் மதுரையில் பதுங்கி இருப்பதாகத் தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் தனிப்படை காவல்துறையின் குழுவானது விரைந்து சென்று மதுரையை அடுத்த ராஜபாளையத்தில் வைத்து கைது செய்தனர்.
பிரபல ரவுடியான இவர், அண்மையில் தமிழக பாஜகவில் மாநில பட்டியலின பிரிவு செயலாளராகப் பதவி ஏற்றிருக்கும் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். மேலும், சமீபத்தில் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோரின் தலைவனாக இருந்தவர் சைலேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கனமழை எதிரொலி; எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகத்தைச் சூழ்ந்த மழை நீர்!