சென்னை:சென்னையில் நள்ளிரவில் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமியை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், பல குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் இளைஞர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் வசித்து வரும் தம்பதிக்கு, 11 மாத பெண் குழந்தை மற்றும் 6 வயதில் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் (மே 22) நள்ளிரவு 1 மணியளவில் குடும்பத்தினர் 4 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால், குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது குழந்தையிடம் தவறாக நடந்து கொள்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் தாய் கூச்சலிட்டுள்ளார். இவ்வாறு குழந்தையின் தாயின் கூச்சல் சத்தம் கேட்ட அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து, பிடிபட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது, அந்த நபர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கயிற்றால் அவரது கைகளை கட்டி காவல் துறையினர் வரும் வரை பொதுமக்கள் சிறை பிடித்து வைத்திருந்தனர்.