சென்னை: வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சரண்யா. இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “நான் நேற்றிரவு 9.30 மணியளவில் எனது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு குடியிருப்பு வளாகத்தின் கீழ் தளத்திற்கு சென்றேன். அப்போது அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசித்து வரும் காமில் என்பவரைக் காண அவரது உறவினரான அப்துல்லா குழந்தைகள் உட்பட குடும்பத்தாருடன் வந்திருந்தார்.
கீழ் தளத்திற்கு வளர்ப்பு நாயுடன் தான் வந்த நிலையில், நாய் எதிர்பாராத விதமாக அப்துல்லாவின் குழந்தை மீது தாவ முயன்றது. அதனால், நான் எனது நாயை இழுத்துப் பிடித்து அதை கட்டுப்படுத்தினேன். நடந்ததற்கு மன்னிப்பும் கேட்டேன். ஆனால், அப்துல்லா மற்றும் குடும்பத்தினர் நான் மன்னிப்புக் கேட்டதை பொருட்படுத்தாமல் நாய் குழந்தை மீது தாவ முயன்ற ஆத்திரத்தில் என்னை தரக்குறைவாக திட்டி, அப்துல்லாவின் உறவினர் ஒருவர் என்னை கையால் தாக்கினார். என்னை தரக்குறைவாக திட்டி, தாக்கிய அப்துல்லா மற்றும் கையால் தாக்கிய உறவினர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்துல்லாவும் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சரண்யாவின் நாய், எனது குழந்தையை கடிக்க வந்ததை தட்டிக் கேட்டதற்கு சரண்யா மற்றும் குடும்பத்தார் சேர்ந்து மீண்டும் எனது குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைப்பதாக கூறி மிரட்டினர். சரண்யாவின் உறவினர்கள் எங்கள் மதத்தை தரக்குறைவாகப் பேசி திட்டி, எனது உறவினரான அன்வர் என்பவரை சரண்யாவின் உறவினர்கள் தாக்கிவிட்டனர்.
அதனால் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர்கள் மீது காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அப்துல்லா மற்றும் அன்வர் ஆகியோரை சரண்யாவின் உறவினர்கள் தாக்கும் காட்சிகளும், அதைத் தடுக்க முடியாமல் அப்துல்லாவின் மனைவி உதவி கேட்டு அலறியபடி ஓடிச் சென்று குடியிருப்பின் அருகே ரோந்துப் பணியில் இருந்த காவலர்களை அழைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இரு புகார்கள் தொடர்பாகவும் வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது