சென்னை:மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று (நவ.17) இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.17) காலை 5.30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது.
தொடர்ந்து, காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 250 கி.மீ கிழக்கு - வடகிழக்கே, டிகாவில் இருந்து (மேற்கு வங்கம்) சுமார் 180 கி.மீ கிழக்கு - தென்கிழக்கே, கேப்புபாராவில் இருந்து (வங்கதேசம்) சுமார் 180 கி. மீ தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.