தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைக்கிளிங் வீராங்கனைக்கு ரூ.13.99 லட்சம் மதிப்பில் மிதிவண்டி - அமைச்சர் உதயநிதி வழங்கினார்! - ரூ14 லட்சம் மதிப்பில் சைக்கிள்

கோவையைச் சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனைக்கு, போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரூ.13.99 லட்சம் மதிப்புள்ள மதிவண்டியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

cycle
மிதிவண்டி

By

Published : May 22, 2023, 5:09 PM IST

சென்னை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், தபித்தா. அங்குள்ள அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் பங்கேற்ற தபித்தா, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, தற்போது National Centre of Excellence (NCOE) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிதிவண்டியை வழங்கினால், பல்வேறு சாதனைகளைப் படைத்து நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையினை பரிசீலித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீராங்கனை தபித்தாவுக்கு மிதிவண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான Argon 18 PRO (Complete bike) – Competition Wheel Set, Mavic Front Five Spoke Wheel Set and Mavic Rear Dic Wheel set மிதிவண்டி வாங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 22) நடைபெற்ற நிகழச்சியில், சைக்கிளிங் வீராங்கனை தபித்தாவுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிதிவண்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அகில இந்திய கூடைப் பந்து போட்டி.. இந்திய கப்பல் படை அணி சாம்பியன்!

தனது கோரிக்கையினை ஏற்று மிதிவண்டி வழங்கிய அமைச்சர் உதயநிதிக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி கூறிய சைக்கிளிங் வீராங்கனை தபித்தா, "சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தருவேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான தொழில்சார் போட்டிகள்! வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்!

ABOUT THE AUTHOR

...view details