சென்னை: கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முன்பாக சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர்.
அதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைகோரி வழக்குத்தொடரப்பட்டது. அந்த விசாரணையின்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவித்து 21 நாள்கள் கடந்த நிலையில் தற்போது வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தாததற்குக் காரணம் என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஓ.பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.
செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் இந்தச் சம்பவத்திற்கு திமுக தான் முழுக்காரணம். தமிழ்நாடு காவல் துறை, திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது. காவல் துறை கோபாலபுரத்தில் பணி செய்து கொண்டிருக்கிறது. இரண்டு நாள்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் காவல் துறையினர் விசாரணையை தொடங்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:பொதுநிகழ்வுகளில் பேச சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?: ஆளுநருக்கு ஆர்.டி.ஐ.யில் கிடுக்கிப்பிடி கேள்வி